Wednesday, May 10, 2017

டெட் தேர்வுக்கு பின் ஆசிரியர்கள் பீதி!

பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பால், ’டெட்’ தேர்வு எழுதிய பின், முடிவுகளை எதிர்நோக்கி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ’பீதி’யுடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த, 29, 30 ஆகிய இரு நாட்கள் நடந்தது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு பின், டெட் தேர்வு நடந்ததால், ஆசிரியர்கள், பட்டதாரிகள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. 

மாநிலம் முழுவதும், 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர், இத்தேர்வை எழுதினர். இதன்மூலம், பள்ளிகளில் காலியாக உள்ள, 1,116 பணியிடங்கள் நிரப்பப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், டெட் தேர்ச்சியடையாத ஆசிரியர்களும், இத்தேர்வு எழுதினர். இவர்கள் தேர்ச்சி பெற, இதுதான் இறுதி வாய்ப்பு என, கடந்த மார்ச் 1ம் தேதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த கண்ணப்பன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்தார்.

பள்ளி வாரியாக டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் இருந்து, தோல்வியடைந்தால் பணியில் இருந்து, விலகுவதாக எழுதி வாங்கப்பட்டது. பின், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த அறிவிப்பு திரும்பி பெறப்பட்டது. இருப்பினும், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட, ஒப்புதல் வாக்குமூலத்தை பத்திரமாக பாதுகாத்து வருகின்றன.

டெட் எழுதி தேர்ச்சி பெற, வரும் 2022 கல்வியாண்டு வரை, மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளது. ஆனால், மாநில அரசு சார்பில், எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

இதனால், பொதுத்தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களை போல், டெட் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் பீதியுடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, தென்னக கல்விக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:
மத்திய அரசு அரசாணையில், ஆசிரியர் தகுதித்தேர்வு, ஆண்டுதோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, மூன்றரை ஆண்டுகள் வரை, தமிழகத்தில் டெட் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போதைய தேர்வு, இறுதி வாய்ப்பு என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது ஏற்க முடியாதது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஏற்பதாக தெரியவில்லை. பணியில் சேர்ந்து, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், பணிப்பதிவேடு துவங்காததால், மருத்துவ விடுப்பு, வருகைப்பதிவு, ஊதிய உயர்வு, என, எவ்வித சலுகையும் அளிக்கப்படுவதில்லை.

சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் விலக்கு அளித்து, கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுவது போல, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கும், விலக்கு அளிக்கப்பட வேண்டும். கற்பித்தல் பயிற்சி அளித்து, பணிப்பதிவேடு துவங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment