Wednesday, April 26, 2017

29ல் ஆசிரியர் தகுதி தேர்வு; 26,466 பேர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு, 29 மற்றும், 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், 26,466 பேர் பங்கேற்கின்றனர்.

இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - -1 மற்றும் தாள் - 2, இம்மாதம், 29 மற்றும், 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், 26,466 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வு மையங்களில், 65 முதன்மை கண்காணிப்பாளர்கள், 65 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 65 துறை அலுவலர்கள், 72 கூடுதல் துறை அலுவலர்கள், 1,330 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

245 பேர் நியமனம்

தேர்வர்களை முழு பரிசோதனை செய்ய, உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், 245 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாற்றுத்திறனாளி தேர்வர்கள், 81 பேருக்கு, சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து, தேர்வு மையத்திற்கு வினாத்தாள்களை வழித்தட அலுவலர்களுடன் பாதுகாப்பாக எடுத்து செல்ல ஆயுதம் ஏந்திய காவலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வரும் தேர்வர்கள், காலை, 8:30 மணிக்குள் வர வேண்டும். காலை, 10:00 மணிக்கு மேல், தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு மையத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச்சீட்டு, நீலம் அல்லது கறுப்பு பந்துமுனை பேனா மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.
அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை. அலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதிஇல்லை.

தேர்வறைக்குள் அறை கண்காணிப்பாளர் அல்லது சக தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நிரந்தர தடை

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றாத தேர்வர்கள் அன்றைய தேர்வை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படாததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன், காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment